அன்பார்ந்த யாழ் இந்துக் கல்லூரி சமூக சகோதரர்களே,
அண்மையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்பு, எமது பாடசாலைக்கான பங்களிப்பை விரைவாகவும் சிறப்பாகவும் செய்யும் ஒரு நல்ல நோக்குடன் பாடசாலையில் எமக்கு ஒரு அலுவலகம் வேண்டும் என அதிபரிடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க அதிபரால் எமக்கு வழங்கப்பட்ட அறையில் எமது பெயர்ப்பலகை போட்டதும் ஆனால் அது தமது பாவனையில் உள்ள அறை என்று யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கம் தெரிவித்ததும் அதைத் தொடர்ந்து நடை பெற்ற விரும்பத்தகாத சம்பவங்களும் எல்லோரும் அறிந்ததே. நாம் நல்ல எண்ணத்துடன் ஆரம்பித்த இம்முயற்சி சரியான புரிந்துணர்வின்மையாலும் தொடர்பாடல்களில் ஏற்பட்ட குறைபாடுகளினாலும் இந்நிலைக்கு சென்றதையிட்டு நாம் மிகுந்த கவலை கொள்கின்றோம். இதை ஆரம்பத்திலேயே முடிவுக்கு கொண்டுவர நாம் எடுத்த முயற்சிகள் பலனளிக்காமையும் துரதிர்ஷ்டமே. அதிபரால் தரப்பட்ட அறையில் பெயர்ப்பலகை எம்மால் போடப்பட்டதுதான் ஆனால் அதனைத் தொடர்ந்து பாடசாலயில் நடைபெற்ற சம்பவங்களுக்கும் எமது சங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதுபோல் அண்மையில் சில சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்டதுபோல் அதிபர் பதவி தொடர்பான சிபாரிசுக் கடிதங்கள் எதுவும் எம்மால் வழங்கப்படவும் இல்லை.
நாம் சகல பழைய மாணவர் சங்கங்களுடனும் கல்லூரியின் நன்மைக்காக நட்புறவுடன் ஒன்றிணைந்து சேவையாற்றவே விரும்புகின்றோம். இப்பிரச்சனையானது இவ்விரண்டு சங்கங்களுக்குமான நிரந்தர பிரச்சனை அல்ல. கல்லூரியின் முதல்வர் என்ற ரீதியில் கல்லூரிக்குள் நடந்த இந்த சம்பங்களை அதிபர் கையாளும் அதே நேரத்தில் கல்லூரிக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்ட எமது பழைய மாணவர் சங்கத்துடன் இதே நோக்கத்திற்காக இயங்கும் யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கமும் கல்லூரியின் நன்மைக்காக இப்பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு காண்பதற்கு முன்வருவார்கள் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.
அதே நேரம் இது சம்பந்தமாக பலர் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். திட்டமிட்டோ அல்லது பிழையான தரவுகளை வைத்துக்கொண்டோ சிலர் தவறான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்படும் தங்களின் இப்பிழையான கருத்துக்களால் மற்றைய பழைய மாணவர்களும் தவறாக விளங்கிக்கொள்வதுடன் இது சங்கங்களுக்கிடையிலான உறவை மேலும் பாதிக்கும். நாம் ஏற்கனவே கூறியதுபோல் கல்லூரியின் நலனுக்காக எமது சங்கம் எந்தவிதமான முரண்பாடுகளையும் தீர்க்கத் தயாராக உள்ளது. ஆகவே கொழும்பு பழைய மாணவர் சங்கம் சம்பந்தமான தகவல்களை சமூக வலைத்தளங்களில் எழுதமுன்னர் அவற்றை சங்கத்தின் பொறுப்பு வாய்ந்த நிர்வாகக் சபை உறுப்பினர்களிடம் உறுதிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Download JHC OBA Colombo Statement
நன்றி.